கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்


கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
x
தினத்தந்தி 19 Nov 2020 11:18 AM IST (Updated: 19 Nov 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

கனமழை எதிரொலியாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, மூலவைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆண்டிப்பட்டி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக, நேற்று காலை மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்டமனூர் மற்றும் கடமலைக்குண்டு பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதேபோல முல்லைப்பெரியாற்றி லும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. போடி பகுதியில் உற்பத்தியாகும் கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மூலவைகை ஆறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு ஆகிய 3 ஆறுகளும் சந்திக்கும் இடமான தேனி அருகே குன்னூர் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த 3 ஆறுகளின் தண்ணீரும் அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகை அணைக்கு போய் சேருகிறது.

இதன் எதிரொலியாக, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 82 கன அடி தண்ணீர் வைகை அணைக்கு வந்தது. காலை 10 மணிக்கு 5 ஆயிரத்து 5 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி 6 ஆயிரத்து 456 கனஅடி தண்ணீர் வைகை அணைக்கு வந்தது.

நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மதியம் 2 மணி நிலவரப்படி 50.66 அடியாக உயர்ந்தது. நேற்று ஒருநாளில் 1 அடி தண்ணீர் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

மூலவைகை, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த ஊராட்சிகள் மூலம் ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணித்து அதற்கு ஏற்ப, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கிராமங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே க.விலக்கு அருகே உள்ள திருமலாபுரம் ஏ.டி.காலனி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சில தெருக்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Next Story