தொடர்மழை காரணமாக கொடைக்கானல் நீர்வீழ்ச்சி, அருவிகளில் வெள்ளப்பெருக்கு மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் பகுதியில் தொடர் மழையால் நீர்வீழ்ச்சி, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் 94.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் 21 அடி உயரம் கொண்ட பழைய அணையின் நீர்மட்டம் 11.4 அடியாகவும், 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் 15.10 அடியாகவும் உயர்ந்தது.
அதேபோல் கொட்டி தீர்க்கும் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார் அருவி, பள்ளங்கி அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நட்சத்திர ஏரி நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை கொடைக்கானலில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெருமாள் மலைக்கு செல்லும் சாலையில் டைகர் சோலை என்ற பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
மேலும் நகரின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நேற்று பகல் முழுவதும் பலத்த காற்றுவீச்சு இருந்ததால், நகரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக் கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக கொடைக் கானல் மலைப்பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சிகள் உருவாகின.
Related Tags :
Next Story