குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழையால் சாலையில் மரங்கள் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு + "||" + Coonoor, Kotagiri Due to heavy rain Trees fell on the road Traffic damage
குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழையால் சாலையில் மரங்கள் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு
குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை காரணமாக சாலையில் மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இரவில் காற்றுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டபுள்ரோடு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ராட்சத கர்பூர மரம் வேரோடு சாய்ந்து கடைகள் மீது விழுந்தது. இதனால் அந்த கடைகள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
அதுபோல் குன்னூர் அம்பேத்கார் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த கற்பூர மரம் விழுந்தது. இதனால் மின்மாற்றி மற்றும் 2 மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுபோன்று அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது.
குன்னூர் டென்ட் ஹில் செல்லும் சாலையில் ஒரு வீட்டின் முன்புறம் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வீடு அந்தரத்தில் தொங்குகிறது. இந்த மண் சரிவால் மோட்டார் பைக் ஒன்று சிக்கி கொண்டது. குன்னூர் அருகே உள்ள பந்துமி மற்றும் கால்வாய் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள தேயிலை நர்சரிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தேயிலை நாற்றுகளில் வேர் அழுகியதால் 40 லட்சம் நாற்றுகள் சேதமானது.
கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் இரவு 10 மணிக்கு கோடநாடு செல்லும் சாலையில் குறுக்கே 2 மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மின்வாளால் வெட்டி அகற்றினர்.
இதனால் அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல நேற்று காலை கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் நடுஹட்டி கிராம பகுதியில் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்த மரமும் அகற்றப்பட்டது.
ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா அருகே மழை மற்றும் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-22.2, குந்தா-25, அவலாஞ்சி-36, எமரால்டு-24, கெத்தை-24, கிண்ணக்கொரை-33, குன்னூர்-74, உலிக்கல்-45, கீழ் கோத்தகிரி-37, கோத்தகிரி -26.6, கோடநாடு-40 உள்பட மொத்தம் 562.8 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 19.41 ஆகும். அதிகபட்சமாக குன்னூரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.