தாமிரபரணி ஆற்றில் கரை புரளும் வெள்ளம்: நெல்லை - தென்காசியில் விட்டுவிட்டு பெய்த மழை 600 குளங்கள் நிரம்பின
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 600 குளங்கள் நிரம்பி உள்ளன.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. நெல்லையில் நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் மதியம் 3 மணிக்கு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாலையில் சாரல் மழை பெய்தது.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து கரைபுரண்டு ஓடுகிறது. மழையின் காரணமாக சுத்தமல்லி அணைகட்டு நிரம்பிவழிகிறது. பேட்டை லாலுகாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
அதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்தது. பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டதால், அந்த பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன.
பாபநாசத்தில் 117 மி.மீ. மழை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பாபநாசத்தில் அதிகபட்சமாக 117 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6,213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்து, 117.20 அடியை எட்டியது. அணையில் இருந்து 359 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 89.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,992 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
600 குளங்கள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 8 வீடுகள் பகுதி சேதமடைந்து உள்ளன. ராதாபுரம் தாலுகாவில் 4 வீடுகளும், பாளையங்கோட்டை தாலுகாவில் 2 வீடுகளும், நாங்குநேரி தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.
தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு பாசன திட்டத்தில் 466 குளங்கள் உள்ளன. இதில் 176 குளங்கள் நிரம்பி உள்ளன. மேல வைப்பாறு பாசன திட்டத்தில் 77 குளங்கள் உள்ளன. இதில் 4 குளங்கள் நிரம்பி உள்ளன. பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான 433 குளங்களில் 4 குளங்கள்நிரம்பின.
மாவட்டத்தில் தொடர் மழைக்கு மொத்தம் 8 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் செங்கோட்டை தாலுகாவில் 2, ஆலங்குளம், கடையநல்லூர் தாலுகாக்களில் தலா ஒரு வீடுகள் முழுமையாகவும், தென்காசி, தாலுகாவில் 2, திருவேங்கடம், சிவகிரி தாலுகாக்களில் தலா ஒரு வீடு பகுதியாகவும் சேதம் அடைந்தன. மழையின் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 600 குளங்கள் நிரம்பி உள்ளன.
அதிகாரிகள் கண்காணிப்பு
தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,145 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 80.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 452 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அதேபோல் கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 452 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. அதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் 101.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கரைப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையளவு விவரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
பாபநாசம்-117, சேர்வலாறு-106, மணிமுத்தாறு-65, நம்பியாறு-26, கொடுமுடியாறு-60, அம்பை-80.40, சேரன்மாதேவி-68, ராதாபுரம்-34, நாங்குநேரி-43, பாளையங்கோட்டை-46, நெல்லை-42.
கடனாநதி-25, ராமநதி-95, கருப்பாநதி-62, குண்டாறு-99, அடவிநயினார்-58, ஆய்க்குடி-60.56, சங்கரன்கோவில்-48, செங்கோட்டை-71, சிவகிரி-81, தென்காசி-72.40.
Related Tags :
Next Story