தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் முதல்-அமைச்சர் உத்தரவு


தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் முதல்-அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2020 5:27 AM IST (Updated: 20 Nov 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் தற்போது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறையில் உள்ள ரவுடிகள் வெளியில் உள்ள ஆதரவாளர்கள் மூலம் எளிதாக குற்ற சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெயிண்டர் அஜித்தும், நேற்று பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயபிரகாசும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா ஆகியோரை சட்டசபை வளாகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும்

கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். ரவுடிகளை ஒடுக்க வேண்டும். சமீபகாலமாக ரவுடிகளுக்கு இடையே ஏற்படும் மோதலால் கொலைகளை நிகழ்த்துகின்றனர். பழைய குற்றவாளிகளின் பின்னணி என்ன என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும். கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 29 பேர் சமீப காலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story