நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய மழை: ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய மழை: ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 20 Nov 2020 5:48 AM IST (Updated: 20 Nov 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பின.

தென்காசி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று பகலிலும் பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், அச்சன்புதூர், கருப்பாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கடையநல்லூர் அருகே 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக 2 நாட்களில் 10 அடி உயர்ந்து, நேற்று காலை நிரவரப்படி 69.56 அடியாக உள்ளது. அணையின் உச்ச நீர்மட்டத்தை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 400 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கடனா, ராமநதி அணைகள்

இதேபோல் கடனாநதி அணை மற்றும் ராமநதி அணைகளும் நேற்று நிரம்பின. 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணை அதன் உச்சநீர் கொள்ளளவு நீர்மட்டமான 83 அடியை தொட்டு நிரம்பியது. இந்த அணைக்கு வினாடிக்கு 861 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையும் உச்சநீர் கொள்ளளவான 82 அடியை எட்டி நிரம்பியது. இந்த அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 247 கன அடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது.

இதுதவிர தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 161 கனஅடி தண்ணீர் அப்படியே மறுகால் பாய்ந்து செல்கிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 92 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணை உயரம் 143 அடியாகும். இந்த அணை நீர்மட்டம் நேற்று 122 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.68 அடியாக உயர்ந்துள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,959 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக பெருங்கால்வாயில் 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 36.50 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது. 49 அடி உயரம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 15 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதே போல் 23 அடி உயரம் கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 9.97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 16.31 கன அடியாக உள்ளது.

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்காக 321 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நேற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story