நெல்லையில் விடிய, விடிய மழை: 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு


நெல்லையில் விடிய, விடிய மழை: 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 6:05 AM IST (Updated: 20 Nov 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய மழை நீடித்தது.

நேற்று காலையிலும் சாரல் மழை பெய்தது. சிறிதுநேரம் வெயில் அடித்தாலும், பின்னர் மீண்டும் மிதமான மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 72 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் மனக்காவலம்பிள்ளை நகர் வழியாக பாய்ந்தோடியது. அங்கு தாழ்வான இடங்களில் உள்ள 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அங்குள்ள பேச்சியம்மாள் என்ற மூதாட்டியின் வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. உடனே பேச்சியம்மாள் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரும்பாலான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சில வீடுகளில் 5 அடி உயரம் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பாளையங்கோட்டை ஆசாத் தெரு, குறுக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கென்னடி தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாளி மூலம் இறைத்தும், மோட்டார் மூலம் உறிஞ்சியும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஆண்டுதோறும் மழைக் காலத்தில் மனக்காவலம்பிள்ளை நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. எனவே, குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை வெளியேற்ற வேண்டும். அங்கு மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, பாளையங்கோட்டை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை வடிய வைக்க உடனே ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பரபரப்பு

தொடர்ந்து மாநகராட்சி சார்பில், 2 பொக்லைன் எந்திரம் மூலம் மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அங்கு குடியிருப்புகளுக்கு வெள்ளம் செல்லாத வகையில், மண் மூட்டைகளும் அடுக்கப்பட்டன.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. இந்த மழைக்கு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் சியாமளா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மின் வாரிய ஊழியர் கணேசன் வீட்டின் மாடிப்பகுதி இடிந்து விழுந்தது. பாளையங்கோட்டை கல்லூரியின் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி இடிந்து சேதம் அடைந்தது.

நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள், தேர்வுத்துறை அலுவலகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த கல்வி அலுவலகங்களுக்குள் செல்வதற்கான நுழைவு வாசல் முதல் அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. அலுவலகத்துக்குள் ஊழியர்கள் சிரமப்பட்டு செல்கிறார்கள்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்- 21, சேர்வலாறு- 9, மணிமுத்தாறு 4, நம்பியாறு- 37, கொடுமுடியாறு- 25, அம்பை- 15, சேரன்மாதேவி- 11, ராதாபுரம்- 30, நாங்குநேரி- 20, பாளையங்கோட்டை- 72, நெல்லை- 15.

கடனா- 45, ராமநதி- 15, கருப்பாநதி- 13, குண்டாறு- 43, அடவிநயினார்- 13, ஆய்குடி- 11, சங்கரன்கோவில்- 36, செங்கோட்டை- 31, சிவகிரி- 26, தென்காசி- 9.

Next Story