செம்பட்டி அருகே கோர விபத்து: தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி - தேனிக்கு சமையல் வேலைக்கு சென்றபோது சம்பவம்
செம்பட்டி அருகே தனியார் பஸ், சரக்கு வேன் மீது மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். தேனிக்கு சமையல் வேலைக்கு வேனில் சென்றபோது கோர சம்பவம் நடந்தது.
செம்பட்டி,
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 47). சமையல் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த தனது குழுவினருடன் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பார். இந்த நிலையில் தேனியில் ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சங்கரநாராணயன் சமையல் ஆர்டர் பெற்றிருந்தார். எனவே, நேற்று இரவு அவர் தனது குழுவினருடன் தேனிக்கு புறப்பட்டார்.
இதற்காக சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை ஒரு சரக்கு வேனில் ஏற்றினர். பின்னர் அந்த வேனில், சமையல் குழுவினர் தேனியை நோக்கி பயணம் செய்தனர். அந்த வேனை டிரைவர் முருகன் (42) என்பவர் ஓட்டினார். இவர்களின் சரக்கு வேன் திண்டுக்கல்-தேனி சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தது.
அதேபோல் சித்தையன்கோட்டையில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி அருகே வந்த போது, சமையல் தொழிலாளர்களின் சரக்கு வேன் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சரக்கு வேனில் பயணித்த சமையல் தொழிலாளி தேவி (40) சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதேநேரம் மற்றவர்கள் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வேனுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் வேன் டிரைவர் முருகன், சங்கரநாராயணன், சமையல் தொழிலாளர்களான ராணி, தெய்வானை, மற்றொரு தேவி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே டிரைவர் முருகன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து நடந்த இடத்தில் மளிகை பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் விபத்து காரணமாக திண்டுக்கல்-தேனி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story