மேகமலை, வெள்ளிமலை பகுதியில் விடிய, விடிய கனமழை: வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது


மேகமலை, வெள்ளிமலை பகுதியில் விடிய, விடிய கனமழை: வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 20 Nov 2020 10:12 AM IST (Updated: 20 Nov 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது.

தேனி, 

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவிலும் மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. நேற்றும் மழை தொடர்ந்தது.

இதனால், மூலவைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கண்டமனூர் ஆற்றுப்பாலத்தை ஒட்டியபடி தண்ணீர் சென்றது. கடந்த 2011-ம் ஆண்டு வைகை ஆற்றில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளப்பெருக்குக்கு பிறகு, நேற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் ஆற்றில் ஓடியது.

இதனால் வருசநாடு முதல் தேனி வரை ஆற்றங்கரையோர பகுதிகளில் நின்று வெள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்தனர். தேனி அருகே அம்மச்சியாபுரம்-அய்யனார்புரம் இடையே வைகை ஆற்றுப் பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட பின்னர் ஆற்றில் முதல் முறையாக பிரமாண்ட அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாலத்தில் நின்று கொண்டு பலரும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.

அய்யனார்புரத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில், கருப்பசாமி கோவில் மற்றும் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களின் வளாகத்தில் சுமார் 6 அடி ஆழத்துக்கு தண்ணீர் சூழ்ந்தது.

கண்டமனூர் ஆற்றுப்பாலம் பழமையான பாலம் ஆகும். இங்கு பாலத்தை ஒட்டியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மக்களின் பாதுகாப்பு கருதி இந்த பாலம் வழியாக போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கண்டமனூர் பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாலத்தின் இருபுறமும் சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து சாலையை போலீசார் மூடினர். இதனால், வாகனங்கள் க.விலக்கு வழியாகவும், அம்மச்சியாபுரம் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான ராட்சத மரங்கள் இழுத்து வரப்பட்டன. வெட்டி வைக்கப்பட்ட மரக்கட்டைகளும் தண்ணீரில் மிதந்து வந்தன. குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட உறைகிணறுகளை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடியது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 5ஆயிரத்து 312 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணியளவில் 15 ஆயிரத்து 85 கனஅடியாக அதிகரித்தது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், 15 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 50 அடியாக இருந்தது. இந்தநிலையில் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது 53 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளது.

Next Story