கடலூர் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.45ஆயிரம் பறிமுதல்


கடலூர் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.45ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Nov 2020 5:44 AM GMT (Updated: 20 Nov 2020 5:44 AM GMT)

கடலூர் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர், 

கடலூர் பஸ் நிலையம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு, அதாவது அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

இது தவிர கூடுதல் நேரம் கடையை திறந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து நேற்று கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜசிங் தலைமையிலான போலீசார் இரவு 10 மணிக்கு அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மதுபாட்டில்கள் வாங்குவது போல் நடித்தும் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து கடை திறப்பு நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தொகை எவ்வளவு? அதை விட கூடுதலாக பணம் இருப்பு உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்தனர்.நள்ளிரவு 1.30 மணி வரை நடந்த இந்த சோதனையில் 2 கடைகளிலும் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தவிர டாஸ்மாக் கடை ஊழியர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடம் இருந்து இருப்பு விவரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச்சென்றனர். இருப்பினும் டாஸ்மாக் கடையில் நடந்த இந்த சோதனையால் கடலூர் பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Next Story