ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி
x
தினத்தந்தி 20 Nov 2020 11:50 AM IST (Updated: 20 Nov 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வைரசின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 780 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையில் ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 92 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 ஆயிரத்து 244 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது 399 பேர் மட்டுமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story