4-வது நாளாக தொடர்மழை: கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம்
கோவில்பட்டியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த சாலையோரத்திலுள்ள ஓடைகளில் உள்ளஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை 4-வது நாளாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கோவில்பட்டி தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. நகரிலுள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால், மழை நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
கோவில்பட்டி அத்தை கொண்டானில் உள்ள கண்மாய்க்கு இனாம் மணியாச்சி இந்திரா நகர், சீனிவாசநகர் பகுதியிலிருந்து ஓடைகள் மூலமாக மழைநீர் வந்து சேரும். ஓடைகள் தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளால் அடைப்புகள் ஏற்பட்டு இருப்பதால் கோவில்பட்டி நகரில் நேற்று முன்தினம் முதல் காலை வரை பெய்த மழைநீர் ஓடைகள் வழியாக செல்ல வழியில்லாததால், இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஓடையை தூர்வாரும் பணி
இதனால் கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தல் சாலை மற்றும் கூடுதல் பஸ் நிலையம் செல்லும் பயணிகள், 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் போன்ற வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் மிதந்தவாறு சென்றன. தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரம் வரவழைத்து ஓடைகளில் தூர்வாரி மழைநீர் மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.
அத்தை கொண்டான் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகளை தூர்வாரி மழைநீர் வரவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் இரண்டு புறமும் உள்ள ஓடைகளில்ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மழை நீர் சீராக செல்ல வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதேபோல் நேற்ற பகலிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலைகள், தெருக்களில் மழை நீர் தேங்கி கிடந்தன.
Related Tags :
Next Story