மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் + "||" + New law to ban online rummy in Karnataka

கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம்

கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம்
கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்றைக்கு அனைவரது கையிலும் செல்போன்கள் தவழ்கின்றன. எனவே ‘ஆன்லைன்’ விளையாட்டுகள் செல்போனை ஆட்டிவித்து வருகின்றன. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு மோகத்தில் மூழ்கி உள்ளனர். திரையுலக பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அதிக அளவில் விளம்பர தூதுவர்களாக இருப்பதால் லட்சக்கணக்கான பேர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகினர்.

பசவராஜ் பொம்மை

இந்த நிலையில் கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலத்தில் தற்போது ‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை ஆடுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதமாக இருப்பதால், அந்த விளையாட்டுகளை விளையாட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

விரைவில் புதிய சட்டம்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்களது வீடு, பணம், சொத்துகளை கூட இழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர், அவைகளுக்கு தடை விதிக்கும்படி அரசிடமும், போலீசாரிடமும் புகார்கள் அளித்து வருகிறார்கள். சில இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு கடிவாளம் போடவில்லை எனில், ஏராளமான இளைஞர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான் ஆன்லைன் ரம்மி உள்ளிட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு முன்வந்துள்ளது.

மற்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்காக எந்த விதமான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை கேட்டு தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே கூடிய விரைவில் கர்நாடகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவது உறுதி. இதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதற்கு முன்பு எந்த ஒரு அரசும் எடுக்காத நடவடிக்கைகளை முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு எடுத்து வருகிறது.

போலீசாருக்கு முழு சுதந்திரம்

போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்திய விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, அதிகார மிக்கவர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமமாகும்.

ஒவ்வொரு நாளும் போலீஸ் நிலையங்களில் புதுவிதமான புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ் துறையிலும் மாற்றங்களை செய்வது அவசியமானதாகும். கர்நாடகத்தில் போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் போலீசார் எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பலரை சிறைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்யாணில் ரெயில்வே மேம்பால ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது
கல்யாணில் ரெயில்வே மேம்பாலத்திற்காக 76.67 மீட்டர் நீள ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது.
2. பொன்னியின் செல்வனில் நடிக்க புதிய தோற்றத்தில் சரத்குமார்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு தாய்லாந்தில் நடந்தது.
3. தூத்துக்குடி புதிய கலெக்டர் கே.செந்தில் ராஜ் பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் கே.செந்தில்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
4. சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாயந்தது.
5. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.