உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு; ரூ.50 ஆயிரம் அபராதம்


உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு; ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Nov 2020 11:03 PM GMT (Updated: 20 Nov 2020 11:03 PM GMT)

உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் சலூன் கடைக்காரரை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தாசில்தாரிடம் புகார் செய்துள்ளார்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹல்லாரே கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ஷெட்டி. இவர் அந்த கிராமத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் அந்த கிராமத்தில் வசித்து வரும் எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்கள் உள்பட அனைவருக்கும் முடிதிருத்தம், முகச்சவரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இதே கிராமத்தை சேர்ந்தவர் சென்னநாயக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர், பட்டியல் இனத்தில் உள்ளவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) முடித்திருத்தமோ, முகச்சவரமோ செய்யக் கூடாது என்று மல்லிகார்ஜுன ஷெட்டியிடம் கூறி வந்துள்ளனர். இதற்கு கிராம தலைவர்களும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

ரூ.50 ஆயிரம் அபராதம்

ஆனால் இந்த உத்தரவை மீறி மல்லிகார்ஜுன ஷெட்டி அனைத்து சமுதாயத்தினருக்கும் முடித்திருத்தம், முகச்சவரம் செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்ன நாயக் மற்றும் கிராமத்தினர் மல்லிகார்ஜுன ஷெட்டிக்கு எதிராக கிராம பஞ்சாயத்தை கூட்டினர்.

அப்போது கிராம தலைவர்கள், உத்தரவை மீறி எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கு முடிதிருத்தம், முகச்சவரம் செய்ததற்காக மல்லிகார்ஜுன ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாகவும், மல்லிகார்ஜுன ஷெட்டி கடையில் யாரும் முடிதிருத்தமோ, முகச்சவரமோ செய்யக் கூடாது. அதை மீறி அவரது கடையில் முடிதிருத்தம், முகச்சவரம் செய்பவர்களும் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்படுவார்கள். மேலும் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறினர். அத்துடன் மல்லிகார்ஜுன ஷெட்டி குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தாசில்தாரிடம் புகார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து மல்லிகார்ஜுன ஷெட்டி கடைக்கு யாரும் முடிதிருத்தம், முகச்சவரம் செய்ய செல்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மல்லிகார்ஜுன ஷெட்டியும், அவரது குடும்பத்தினரும் நேற்று நஞ்சன்கூடு தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.

சம்பவம் பற்றி அவர்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினையில் தங்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என்று தாசில்தாரிடம் மல்லிகார்ஜுன ஷெட்டி முறையிட்டார். இதைகேட்டறிந்த தாசில்தார், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நஞ்சன்கூடு புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்

இதுதொடர்பாக மல்லிகார்ஜுன ஷெட்டி கூறுகையில், நான் ஹல்லாரே கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சலூன் கடை நடத்தி வருகிறேன். தற்போது உயர் வகுப்பை சேர்ந்த சென்ன நாயக் மற்றும் சிலர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு முடித்திருத்தம், முகச்சவரம் செய்யக் கூடாது எனக் கூறி சாதி பாகுபாட்டை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் கூறிய உத்தரவை மீறி முடிதிருத்தம் செய்ததால் என்னையும், எனது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததுடன், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று தாசில்தாரிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதிகிடைக்க வேண்டும். இல்லையெனில் நான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன். இன்றைய நவீன காலத்திலும் சாதிபாகுபாடு, தீண்டாமை கொடுமை நடைமுறையில் இருப்பது வேதனையாக உள்ளது. நான் ஏற்கனவே 2 முறை இதுபோன்ற தண்டனைக்கு ஆளாகியுள்ளேன். அபராதமும் செலுத்தியுள்ளேன். தொடர்ந்து என்னை இவ்வாறு செய்து வருவதால் மன வேதனையில் உள்ளேன். எனவே இந்த விவகாரத்தில் தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் மைசூரு மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story