11 வயதில் சென்னை வந்தபோது லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தா கைது 6 ஆண்டுகளுக்கு பிறகு - போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
11 வயதில் சென்னை வந்தபோது லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது தாத்தா, 6 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர்,
சென்னையை சேர்ந்த 45 வயது பெண், தனது கணவர் மற்றும் 17 வயது மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய மகள், கடந்த சில வருடங்களாக யாரிடமும் பேசாமல், குறிப்பாக ஆண்களிடம் கடும் கோபத்தை காட்டி வந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தாய், லண்டனில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற கவுன்சிலிங் அனுப்பி வைத்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில் சிறுமி அதிர்ச்சி தரும் தகவல்களை டாக்டரிடம் கூறினார்.
2014-ம் ஆண்டு அந்த சிறுமி, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் வந்தார். அப்போது 11 வயதான அந்த சிறுமிக்கு, அவரது தாத்தா பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆண்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ள ஆண்கள் மீது கோபத்தை காட்டி வந்ததாகவும், ஆண்களைப்போல் உடைஅணிந்து கொள்ள முயற்சி செய்வதாகவும், தாத்தாவின் செயல்பாடு மற்ற ஆண்கள் மீது தனக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியதாகவும் டாக்டரிடம் சிறுமி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி அப்போதே லண்டன் போலீசில் புகார் கொடுத்தார். அவர்களது உதவியுடன் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசிலும் ஆன்-லைனில் புகார் கொடுக்கப்பட்டது.
மேலும் திருமங்கலம் போலீசார் கேட்டு கொண்டதன்பேரில் சிறுமியின் தாய் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சென்னை வந்து நேரடியாக புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமியின் தாத்தா மோகன்கிஷின் சந்த் தலானி(68) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story