விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி


விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 21 Nov 2020 9:19 AM IST (Updated: 21 Nov 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம், 

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்கள் முன்கூட்டியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், காணை மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்தமிழ்செல்வனுக்கு(வயது 56) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், கட்சியினரையும் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது 4-வது சட்டமன்ற உறுப்பினராக முத்தமிழ்செல்வன், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story