உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: தஞ்சையில், முதல்-அமைச்சர் உருவபொம்மை எரிப்பு - மறியலில் ஈடுபட்ட 110 தி.மு.க.வினர் கைது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், முதல்-அமைச்சரின் உருவபொம்மையையும் எரித்தனர். இது தொடர்பாக தி.மு.க.வினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து நேற்று தொடங்கினார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் தி.மு.க.வினர், அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையையும் எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதன், நகர துணை செயலாளர் நீலகண்டன், ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலா ரவி உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 867 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story