ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் தர்ணா போராட்டம்


ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:28 AM IST (Updated: 21 Nov 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடம், 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருக்களப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புஷ்பம். இவரது கணவர் செல்வமணி. அதே ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் வாசுகி. தி.மு.க.வை சேர்ந்த இவர், ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் சபாநாயகம். திருக்களப்பூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பான வாட்ஸ்-அப் புகார்கள் தொடர்பாக ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கள ஆய்வுக்கு சென்றபோது ஊராட்சி மன்ற தலைவர் தரப்புக்கும், ஒன்றியக்குழு உறுப்பினர் தரப்புக்கும் கடந்த 10-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் உடலில் அடிபட்ட நிலையில் ஊராட்சி செயலாளர் செல்வமணி மற்றும் அவரது மனைவியும், ஊராட்சி மன்ற தலைவருமான புஷ்பம் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அருகில் இருந்தும், ஊராட்சி செயலாளர் தாக்கப்படுவதை தடுக்க வில்லை என்றும், அதனால் ஊராட்சி செயலாளர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறி, ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.


மேலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்ததால் போலீசாருக்கும், ஊராட்சி செயலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்ததால் ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும், ஊராட்சி செயலாளரை தாக்கிய ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவர் சபாநாயகம் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story