அனக்காவூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் ரூ.2¾ கோடி பணிகள் ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு
அனக்காவூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் ரூ.2¾ கோடியிலான பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கு, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செய்யாறு,
செய்யாறு தாலுகா அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திலகவதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அருணா, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் படிக்கப்பட்டு விவாதம் நடந்தது.
அப்போது ஒன்றிய நிதியிலிருந்து ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் ஆக்கூர் மற்றும் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுதல், புதுப்பித்தல் உள்பட 18 பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு அனுமதி கோரிய தீர்மானத்திற்கும், அனக்காவூர் மும்முனை சந்திப்பில் ரூ.65 லட்சம் மதிப்பில் அழகுபடுத்துதல் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறைக்கு அனுமதி வழங்க கோரிய இரண்டு தீர்மானங்களுக்கும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே கவுன்சிலர்கள் சிலரின் ஆதரவாளர்கள் புகுந்து கேள்விகள் கேட்குமாறு கவுன்சிலர்களை வலியுறுத்தினர். மேலும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அளிக்கும் போது, வெளியாட்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர். அவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அளிப்பதை காணமுடிந்தது.
தொடர்ந்து மன்றக் கூட்டத்தில் உயர் கோபுர மின் விளக்கு பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story