இலங்கைக்கு கடத்த முயன்ற 6 ஆயிரம் பாட்டில் கொரோனா மருந்துகள் சிக்கின - ராமேசுவரத்தில் கடலோர காவல்படை நடவடிக்கை


இலங்கைக்கு கடத்த முயன்ற 6 ஆயிரம் பாட்டில் கொரோனா மருந்துகள் சிக்கின - ராமேசுவரத்தில் கடலோர காவல்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2020 11:30 AM IST (Updated: 21 Nov 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்ட 6 ஆயிரம் பாட்டில் கொரோனா சிகிச்சை மருத்துகளை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மருந்து பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியுடன் இந்திய கடலோர காவல் படையினர் தங்கச்சிமடம் அந்தோணியார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். கடற்கரை அருகே கருவேலமர புதர்கள் இடையே பதுக்கி வைத்திருந்த பார்சல்களை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.

அப்போது அந்த பார்சல்களில் ஏராளமான மருந்து பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்து பாட்டில்களை கைப்பற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த மருந்துகளை அங்குள்ள டாக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதாவது, 2 மில்லி அளவு கொண்ட 6 ஆயிரம் பாட்டில்களில் மருந்துகள் இருப்பதும், இந்த மருந்துகள் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை என்பதும் தெரியவந்தது. இதுவரையிலும் இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்ட நிலையில் தற்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துகளை கடத்தும் முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட இந்த மருந்துகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இலங்கையிலும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மருந்துகளை கடத்திச் சென்று கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டு இருந்ததாகவும், அந்த முயற்சி கடலோர காவல்படையினர் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story