உதயநிதி ஸ்டாலின் கைது: தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மொரப்பூர், மாரண்டஅள்ளியில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொரப்பூர்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மொரப்பூர் பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி தி.மு.க.வினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சூடப்பட்டி சுப்பிரமணி தலைமையில் வெள்ளிச்சந்தையில் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தீபா முருகன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஹரிபிரசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி 4 ரோட்டில் தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பென்னாகரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story