2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து - தி.மு.க.வினர் சாலை மறியல்


2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து - தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2020 5:20 AM GMT (Updated: 22 Nov 2020 5:20 AM GMT)

2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகூர்,

திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். இதை கண்டித்து பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகை அக்கரைபேட்டையில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு போலீசார், உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியில் பொரக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து நாகூர் கொத்தவாசல் சாவடியில் தி.மு.க நாகை மாவட்ட சிறுபான்மை நல ஒருங்கிணைப்பாளர் குழு அமைப்பாளர் ராஜா வாப்பா தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 130 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கல் கடைத்தெரு பகுதியில் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சிக்கல் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகை- திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல் கீழ்வேளூரில் கச்சனம் சாலை சந்திப்பில் கீழ்வேளூர் நகர செயலாளர் அட்சயலிங்கம் தலைமையில் தி.மு.க வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

பனங்குடி ஊராட்சி வாஞ்சூரில் திருமருகல் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், ஏர்வாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் கொட்டாரக்குடியில் ஒன்றிய குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலும், உத்தமசோழபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமையிலும், ஆதலையூரில் கண்ணையன், இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையிலும், கங்களாஞ்சேரி ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலும், திட்டச்சேரியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சாகுல் அமீது ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயம் முருகையன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்கள் ராமநாதன், செல்வராசு, கைலாசம், வீரமணிகண்டன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அன்பு வேலன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ஆசைதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 38 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னகுமார், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி முருகேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், தி.மு.க.வினர் 20 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Next Story