சுருக்க திருத்தமுறை நடைபெறும் மையங்களில் வயதானவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் - வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் வேண்டுகோள்
சுருக்க திருத்த முறை நடைபெறும் மையங்களில் வயதானவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம்கள் 1,151 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 2,291 வாக்குச்சாவடிகளில் நேற்று நடைபெற்றது. இதனை தஞ்சை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவையயறு தொகுதியில் உள்ள சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சண்முகம் கூறியதாவது:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் பட்டியலை பெற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறப்பு சுருக்க திருத்த முறை நடைபெறும் மையங்களில் பேனர் வைத்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்து ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் பேசுகையில், “சிறப்பு முகாம்களின் போது பொதுமக்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையினறி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை விண்ணப்பபடிவங்கள் வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏற்படும் அனைத்து விதமான சந்தேகங்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ அழைத்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். புகார்களை பதிவு செய்து தீர்வு பெறலாம். வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story