பருவமழையின் போது வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்


பருவமழையின் போது வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்
x
தினத்தந்தி 22 Nov 2020 12:18 PM GMT (Updated: 22 Nov 2020 12:18 PM GMT)

குமரி மாவட்டத்தில் பருவமழையின் போது வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பருவமழையின் போது ஏதேனும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் மக்கள் சிக்கி கொண்டால் அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த வெள்ள அபாய ஒத்திகையானது நாகர்கோவில் எல்கைக்கு உட்பட்ட சுங்கான்கடை அருகில் உள்ள கருப்புக்கோடு குளத்தில் நடந்தது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஜாபர்சேட் உத்தரவு படி இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

தத்ரூபமாக...

நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஒத்திகையின் போது வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கி கொள்வது போன்றும், அவ்வாறு சிக்குபவர்களை தீயணைப்பு வீரர்கள் துணிச்சலுடன் பத்திரமாக மீட்டு டாக்டர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றும், பின்னர் ஆம்புலன்சு மூலமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது போன்றும் தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி கொண்ட மக்கள் அவர்களிடமுள்ள கியாஸ் சிலிண்டர், லாரி டியூப், பயனற்ற தண்ணீர் பாட்டில்கள், கேன்கள், வாழை தண்டு, பிளாஸ்டிக் குடம் மற்றும் தேங்காய் நெட்டு போன்ற பொருட்களை பயன்படுத்தி தங்களை தாங்களே எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்ற ஒத்திகை பயிற்சியையும் செய்து காட்டினர். அதோடு ரப்பர் படகு மூலம் வயதானவர்கள், பெண்கள் மற்றும் கால்நடைகளை எவ்வாறு காப்பாற்றுவது? என்றும், தண்ணீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு எப்படி முதுலுதவி அளித்து காப்பாற்றுவது? என்றும் ஒத்திகையின் போது தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

உண்மை என நம்பிய பொதுமக்கள்

இந்த நிகழ்ச்சியின் போது அனைத்தும் உண்மையாக நடப்பது போன்றே இருந்தது. பொதுமக்கள் தண்ணீரில் தத்தளிப்பது மற்றும் அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு முதலுதவி அளிப்பது போன்ற காட்சிகளை பார்த்த அப்பகுதி மக்கள் அவற்றை முதலில் உண்மை என்றே நம்பினர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் சற்று நேரம் செல்ல செல்ல தான் அனைத்தும் ஒத்திகை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி விட்டு ஒத்திகையை பார்வையிட்டனர்.

ஒத்திகை நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அதிகாரி சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ஜெகதா, வருவாய் ஆய்வாளர்கள் சேவியர், அருள்சேகர், வில்லுக்குறி கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ், குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் கோபாலன், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் துரை, ராஜா மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story