ராமநாதபுரம் அருகே விவசாயியிடம் ஆன்லைனில் ரூ.99 ஆயிரம் மோசடி


ராமநாதபுரம் அருகே விவசாயியிடம் ஆன்லைனில் ரூ.99 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 22 Nov 2020 1:07 PM GMT (Updated: 22 Nov 2020 1:07 PM GMT)

ராமநாதபுரம் அருகே விவசாயியிடம் ஆன்லைனில் ரூ.99 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ளது பி.கொடிக்குளம். இந்த ஊரைச்சேர்ந்தவர் கணேசன் மகன் முருகன் (வயது34) . விவசாயியான இவர் தனது வீட்டிற்கு ஹோம் தியேட்டர் வாங்க விரும்பி உள்ளார். இதற்காக அவர் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ஒரு நிறுவனத்தின் ஹோம்தியேட்டரை ரூ.1,399 பணம் கட்டி ஆர்டர் செய்துள்ளார். ஹோம் தியேட்டர் வீட்டிற்கு வந்ததும் அதனை எடுத்து பொருத்தி பார்த்தபோது அதன் ஸ்பீக்கரின் தரத்தில் திருப்தி இல்லாததால் அதனை திருப்பி அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கான பணம் அவரின் கணக்கில் திரும்பி வராததால் மேற்படி முருகன் வாடிக்கையாளர் மைய எண்ணில் தொடர்பு கொண்டு பேசி தனது பணம் வரவில்லை என்றும் உடனடியாக பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார்.

மறுமுனையில் பேசிய நபர் விவரத்தை உறுதி செய்வதாக கூறி பணம் திருப்பி அனுப்பப்படவில்லை என்று தெரிவித்து வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் சில நிமிடங்களில் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை அளித்து இணைப்பை துண்டித்துவிட்டார்.

புகார்

ஆனால், சில நிமிடங்களில் முருகனின் வங்கி கணக்கில் இருந்த ரூ.98 ஆயிரத்து 609 பணத்தினை நொடிப்பொழுதில் எடுத்துவிட்டனர். ஹோம்தியேட்டர் வாங்கிய பணம் திரும்பி வராமல் தனது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டதை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொடர்பு கொண்ட செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவன பெயரில் விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரம் பணம் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story