அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உமையஞ்செட்டிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் முரளி (வயது 20), பூச்சந்திரன் என்பவரது மகன் தங்கதுரை (23), தண்டபாணி என்பவரது மகன் சுரேஷ்குமார் (22). இவர்கள் பனியன் நிறுவன தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை 5 மணியளவில் பெருமாநல்லூர் பகுதியிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் அவினாசி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது இவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் ஒரு லாரி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து காகிதங்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
3 பேர் பலி
அந்த லாரியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் முரளி, தங்கதுரை, சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் பேரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவினாசி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story