சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை மாத விழாவில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்மசாமி கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும் யோக லட்சுமி நரசிம்மர் கண்திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். இதன் காரணமாக கார்த்திகை மாத சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது கார்த்திகை மாத திருவிழா தொடங்கி உள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவேண்டும், ஒருநாளைக்கு 900 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
தற்போது திருவிழா தொடங்கியுள்ள நிலையில் காவல்துறையின் முழுமையான சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்யவேண்டும் என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் ஒருநாளைக்கு 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் நேற்று முன்தினம் 54 போலி ஆன்லைன் டிக்கெட்டுகளும், நேற்று பெரிய மலை அடிவாரத்தில் நடந்த சோதனையின் போது 2 போலி ஆன்லைன் டிக்கெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, அதை வைத்திருந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இது போன்ற போலி ஆன்லைன் டிக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story