தானேயில் நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


தானேயில் நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Nov 2020 2:32 AM IST (Updated: 24 Nov 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தானே, 

தானேயில் நவநிர்மாண் சேனா கட்சியின் வார்டு தலைவராக இருந்து வந்தவர் ஜமீல் சேக்(வயது49). இவர் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராபோடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி தலையில் குறி வைத்து சுட்டார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதில் தலையில் குண்டுதுளைத்த நிலையில் ஜமீல் சேக் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜூபிடர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் ஜமீல் சேக் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

வலைவீச்சு

தகவல் அறிந்த ராபோடி போலீசார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் அவினாஷ் அம்புரே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜமீல் சேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஹெல்மட் அணிந்த நிலையில் வெகு அருகாமையில் வந்து தலையில் துப்பாக்கியால் சுட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தானே மாவட்ட நவநிர்மாண் சேனா தலைவர் அவினாஷ் ஜாதவ் கட்சி தொண்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்தவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்கள் போலீசாரை வலியுறுத்தினர். இ்ந்த சம்பவம் ராபோடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story