ஓராண்டு நிறைவு: ‘அதிகாலையில் பதவி ஏற்ற நிகழ்வு மறக்கப்பட வேண்டியவை’ தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
அதிகாலையில் பதவி ஏற்ற நிகழ்வு மறக்கப்பட வேண்டியவை என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா (105 இடங்கள்), சிவசேனா (56 இடங்கள்) ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பங்கீடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராகி கொண்டு இருந்தது.
இந்த வேளையில் தேவேந்திர பட்னாவிஸ் அஜித்பவாருடன் இணைந்து அதிகாலை நேரத்தில் ஆட்சியை அமைத்து அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தினார். இதில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். எனினும் சட்டசபை பெரும்பான்மையை நிரூபிக்க போதிய ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது.
நினைவில் வைக்கதேவையில்லை
இந்த சம்பவம் நடந்து நேற்று ஒரு ஆண்டு முடிந்த நிலையில் அவுரங்காபாத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “தற்போது உள்ள அரசு கவிழ்ந்தால், புதிய அரசின் பதவி ஏற்கும் நிகழ்ச்சி அதிகாலையில் நடக்காது. ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் (அதிகாலையில் பதவி ஏற்றது) மறக்கப்பட வேண்டியவை” என்றார்.
எனினும் இந்த சம்பவம் குறித்து சிவசேனா பா.ஜனதாவை கடுமையாக தாக்கி உள்ளது. இதுகுறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-
அது விடியல் அல்ல. அது இருள். அடுத்த 4 ஆண்டுகளுக்காவது ஆட்சி அதிகாரத்தின் ஒளிக்கதிரை உங்களால் (பா.ஜனதா) பார்க்க முடியாது. அடுத்த தேர்தல் 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் நடக்கும். அப்போதும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story