ஏரியில் பெண் பிணம் மீட்பு: பிரிந்து சென்றதுடன் ஜீவனாம்சம் கேட்டதால் கொன்றது அம்பலம் கள்ளக்காதலியுடன் கணவர் கைது


ஏரியில் பெண் பிணம் மீட்பு: பிரிந்து சென்றதுடன் ஜீவனாம்சம் கேட்டதால் கொன்றது அம்பலம் கள்ளக்காதலியுடன் கணவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2020 9:47 PM GMT (Updated: 23 Nov 2020 9:47 PM GMT)

ஏரியில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்து பிரிந்து சென்று ஜீவனாம்சம் கேட்டதால் மனைவியை, கணவரே கொன்று உடலை ஏரியில் வீசியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கணவரையும், அவருடைய கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.

ஹாசன், 

ஹாசன் தாலுகா சீரனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த 1-ந்தேதி ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துட்டா போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் யாரோ மர்மநபர்கள் பெண்ணை கொன்றுவிட்டு உடலை ஏரியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் உள்பட 3 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஏரியில் பிணமாக மிதந்தது சுஷ்மிதா(வயது 26) என்பதும், இவருக்கும், சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜூ என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதற்கிடையே நாகராஜூ, கோடிஹள்ளியைச் சேர்ந்த சைலா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம் தெரிந்த சுஷ்மிதா நாகராஜை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவர் நாகராஜை பிரிந்து அரிசிகெரேவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் சுஷ்மிதா தங்கி இருந்து வந்துள்ளார்.

கொன்று ஏரியில் உடல் வீச்சு

இதற்கிடையே ஹாசன் போலீசில் தனக்கும், தனது குழந்தைக்கும் நாகராஜ் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஹாசன் கோர்ட்டில் விசாரணையும் நடந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது சகோதரர் மோகன்குமார், கள்ளக்காதலி சைலாவுடன் சேர்ந்து சுஷ்மிதாவை கொல்ல திட்டம் திட்டினார். அதன்படி பெல்லூர் கிராமத்திற்கு உள்ள வீட்டிற்கு சுஷ்மிதாவை வரவழைத்துள்ளார்.

அப்போது நாகராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து சுஷ்மிதாவை கொலை செய்துள்ளனர். பின்னர் காரில் சுஷ்மிதாவின் உடலை கொண்டு சென்று சீரனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு உடந்தையாக நாகராஜின் பெற்றோர் ஈஸ்வர் ராவ், ஜெயஸ்ரீ செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story