டிசம்பர் மாதம் முடியும் வரை கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


டிசம்பர் மாதம் முடியும் வரை கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 3:38 AM IST (Updated: 24 Nov 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பெங்களூரு, 

ஊரடங்கு காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து கடந்த 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதே வேளையில் கல்லூரிகளுக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கல்லூரிகளை மூடவும் அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கிடையே கல்லூரிகள் திறக்கப்பட்டதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக அடிக்கடி வதந்திகள் ஏற்பட்டு பெற்றோர்களையும், மாணவர்களையும் குழப்பம் அடைய செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

விரிவான ஆலோசனை

இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், கல்வித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், கல்வித்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ஐதராபாத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

முதல் முன்னுரிமை

“கர்நாடகத்தில் கல்லூரிகள் கடந்த 17-ந் தேதி திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள், குளிர்காலம் தொடங்கியுள்ளதால் இந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனால் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினர்.

அவர்களின் கருத்தை ஏற்று கர்நாடகத்தில் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாத இறுதியில் மீண்டும் இத்தகைய ஆலோசனை கூட்டத்தை நடத்தி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். குழந்தைகளின் ஆரோக்கியமும், பாதுகாப்புமே அரசுக்கு முக்கியம். அரசின் முதல் முன்னுரிமையும்கூட. அதன் அடிப்படையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பள்ளிகளை திறக்கக்கூடாது

அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியதாவது:-

“பள்ளிகளை திறப்பது குறித்து இன்று(அதாவது நேற்று) விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஒரு தரப்பினர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் பள்ளிகளை திறக்கக்கூடாது என்றும் கூறுகிறார்கள். பள்ளிகளை திறக்காவிட்டால் கிராமப்புற குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கல்வித்துறை தொடர்பான அனைத்து துறை நிபுணர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. இது முதல்-மந்திரி தலைமையில் ஒரு ஆலோசனை நடைபெற வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி ஆலோசனை நடைபெற்றது.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கல்வித்துறை முதன்மை செயலாளர், உண்மை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். நான் செல்லும் இடங்களில் எல்லாம் எப்போது பள்ளிகளை திறக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். மந்திரி சுதாகர், கொரோனா தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையை தெரியப்படுத்தினார்.

குழந்தைகளுக்கு கற்பித்தல்

அதாவது டிசம்பரில் குளிர்காலம் இருப்பதால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. அதனால் கர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அந்த குழு ஆலோசனை கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கும் திட்டம் இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் மேல் படிப்புக்கு தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. அதனால் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கற்பித்தல் பணியை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துகிறோம்.

பள்ளிகளை திறக்காவிட்டால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால் குழந்தைகளின் உயிர் காக்கவே அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. முதல்-மந்திரி அறிவித்துள்ள அறிவிப்பின்படி டிசம்பரில் பள்ளிகளை திறக்கும் திட்டம் இல்லை. ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மூலமாகவும் கற்பிக்கப்படுகிறது. இது ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளது. அரசு எந்த அழுத்தத்திற்கும் பள்ளிகளை திறக்க ஆலோசிக்கவில்லை. எடியூரப்பா முடிவுக்கு நாங்கள் முழு மதிப்பு அளிக்கிறோம். டிசம்பர் மாதம் மீண்டும் கூடி அன்றைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுப்போம்.

முடிவுக்கு வருவோம்

கல்வி கற்றலில் ஜீரோ ஆண்டு என்று கிடையாது. நாங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் பாடங்களை நடத்தி வருகிறோம். அதனால் ஜீரோ ஆண்டு இல்லை. கடந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்தோம். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு தேர்ச்சி வழங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. இதுகுறித்து விரிவாக ஆலோசித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Next Story