50 ஆண்டுகளாக குறைந்த செலவில் மருத்துவம் பார்த்தார் கொரோனாவுக்கு டாக்டர் பலி


50 ஆண்டுகளாக குறைந்த செலவில் மருத்துவம் பார்த்தார் கொரோனாவுக்கு டாக்டர் பலி
x

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 50 ஆண்டு காலமாக குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த டாக்டர், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானார்.

திருவொற்றியூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் ராசப்பன் (வயது 73). இவர், புதுவண்ணாரப்பேட்டை எல்.ஐ.ஜி. காலனியில் சுமார் 50 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக குறைந்த கட்டணத்தில் பொது மருத்துவம் பார்த்து வந்தார். இவரிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கி வந்தார்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவால் பலி

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக அவருடைய மனைவி, வீட்டில் தனிமைப்படுத்திகொண்டார்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் ராசப்பன், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

முன்னாள் கவுன்சிலர்

அதேபோல் திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளவரசன் (55). இவருக்கு வாசுகி என்ற மனைவியும், பிரித்திகா, ஆர்த்திகா என 2 மகள்களும் உள்ளனர். திருவொற்றியூர் மண்டலம் 8-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளரான இளவரசன், 2006-11-ல் திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளவரசன், திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story