ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு


ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 10:49 PM IST (Updated: 24 Nov 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான லாரிகள் பாறாங்கற்கள் லோடு ஏற்றிச் செல்வதால், பக்கத்து ஊரான மேல சிரியந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். லாரிகளில் சிக்கி கால்நடைகளும் இறந்தன.

எனவே கருங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்கள் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் தங்களது கிராமத்தின் வழியாக செல்லக்கூடாது என்று கூறி, மேல சிரியந்தூரில் கிராம மக்கள் நேற்று மதியம் கல்குவாரிகளின் 4 லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் அங்கு சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் சேரகுளம்-பருத்திப்பாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்கள் லோடு ஏற்றி செல்லும் லாரிகளை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

Next Story