சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்களில் சோதனை அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை


சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்களில் சோதனை அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2020 3:41 AM IST (Updated: 25 Nov 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

மும்பை, 

தானே மாவட்டத்தை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் வீடு, அலுவலகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தானே, மும்பையில் காலை முதல் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பிரதாப் சர்நாயக் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் எழுந்தது. இதனையடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்றது.

கங்கனாவை விமர்சித்தவர்

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதற்காக இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை கடுமையாக விமர்சித்தவர் ஆவர். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “கங்கனா ரணாவத் மும்பை வந்தால் எங்கள் துணிச்சலான பெண்கள் அவரை அறையாமல் அனுப்ப மாட்டார்கள். தொழில் அதிபர்களையும், திரைப்பட நட்சத்திரங்களையும் உருவாக்கும் நகரமான மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிடுவதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்ய கோருவேன்“ எனக் கூறியிருந்தார்.

கங்கனா ரணாவத்தை கடுமையாக விமர்சித்த சிவசேனா எம்.எல்.ஏ. வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் ராவத் கருத்து

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். ஆனால் ஏதாவது தகவல், ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்த மாட்டார்கள். மடியில் கனம் இல்லை என்றால் பயம் ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story