மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்


மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2020 4:02 AM IST (Updated: 25 Nov 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய ஜலசக்தி துறை மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பி, அணை கட்ட அனுமதி கோரி வருகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை

இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் அத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிகோளி பேசியதாவது:-

மேகதாது, எத்தினஒலே, கட்டி பசவண்ண குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏற்று நீர் பாசன திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் அதிகாரிகளும் ஈடுபட வேண்டும். மாநில சுற்றுச்சூழல் துறை கொடுக்க வேண்டிய அனுமதியை உடனே வழங்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்ப்பாசனத்துறையில் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

Next Story