சம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவேன் டி.கே.சிவக்குமார் பேட்டி
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவேன் என்றும், சம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம் என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கலபுரகி,
மத்திய-மாநில பா.ஜனதா அரசுகள், பழிவாங்கும் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளன. என்னை இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். எனது மகள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற தினத்திலேயே எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இது பழிவாங்கும் அரசியலின் உச்சம். இதன் மூலம் அவர்களின் பழிவாங்கும் அரசியல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். எனக்கு இடையூறு ஏற்படுத்தினால், பா.ஜனதாவினருக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.
அரசியல் அழுத்தம் இல்லாவிட்டால் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக்கு எதிராக இவ்வளவு வேகமாக செயல்பட வாய்ப்பு இல்லை. பா.ஜனதாவினர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் நேர்மையான முறையில் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். நான் சட்டத்தை மதிக்கிறேன். நாளை (அதாவது இன்று) சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவேன். யாரும் பயப்பட தேவை இல்லை. காங்கிரஸ் தொண்டர்கள் சி.பி.ஐ. அலுவலகம் அருகில் வர வேண்டாம். எனக்கு ஆதரவாக யாரும் பேச வேண்டாம்.
சமூகங்களை உடைக்கும் பணி
வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற விஜயநகரில் இருந்து எனது பயணத்தை தொடங்கியுள்ளேன். மாநில மக்கள் காங்கிரஸ் பக்கம் தங்களின் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். காங்கிரசில் ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் சேர்ந்து வருகிறார்கள். மஸ்கியில் பா.ஜனதா நிர்வாகிகள் காங்கிரசில் சேரும் நிகழ்ச்சி பெரிய அளவுக்கு நடந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள். பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள்.
இடைத்தேர்தல்களில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெறுகிறது. அதனால் மஸ்கி மற்றும் பசவ கல்யாண் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா சமூகங்களை உடைக்கும் பணியை செய்து வருகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் மராட்டிய மற்றும் வீரசைவ-லிங்காயத் சமூக வாரியங்களை ஏன் அமைக்க வேண்டும்?.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story