பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2020 4:39 AM IST (Updated: 25 Nov 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்க போலீசுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் செயல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ‘நிவர்’ புயலை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து துறை அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுவை கடலோர பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள புதுவை அரசுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், தொலைபேசி, கடிதம் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

களப்பணியில் அமைச்சர்கள்

லாஸ்பேட்டையில் மாநில பேரிடர் செயல் மையத்தில் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு நடத்தினேன். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கண்டிப்பாக நடத்தவும், முக கவசம், கிருமி நாசினி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால் பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (இன்று புதன்கிழமை) காலை முதல் நானும், அமைச்சர்களும், அதிகாரிகளுடன் நேரடியாக களப்பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். ‘நிவர்’ புயல் மாலை அதிவேகத்தில் புதுச்சேரியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம். அவசர காலத்தில் அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். புதுச்சேரியில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு ‘நிவர்’ புயலை எதிர்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story