‘நிவர்’ புயல் காரணமாக ‘விடியலை நோக்கி’ பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - 28-ந் தேதி மீண்டும் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


‘நிவர்’ புயல் காரணமாக ‘விடியலை நோக்கி’ பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - 28-ந் தேதி மீண்டும் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 10:30 PM GMT (Updated: 24 Nov 2020 11:38 PM GMT)

‘நிவர்’ புயல் காரணமாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், வருகிற 28-ந் தேதி மீண்டும் தொடங்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

தஞ்சாவூர்,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்“ என்ற பெயரில் சட்டசபை தேர்தல் பிரசார பயணத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த 20-ந் தேதி தொடங்கினார். நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை தஞ்சைக்கு வந்தார். இரவு தஞ்சையில் தங்கினார்.

நேற்று காலை தஞ்சை தெற்கு, மத்திய மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

வரும் சட்டசபை தேர்தலையொட்டி தலைவரின் ஆணைக்கிணங்க ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்து வருகிறோம். அதேபோல் நமது ஆட்சியின்(தி.மு.க.) சாதனைகளையும் எடுத்து சொல்லி எனது பிரசாரத்தை கலைஞர் பிறந்த திருக்குவளையில் கடந்த 20-ந் தேதி தொடங்கினேன்.

தினமும் பிரசாரத்தை ஆரம்பித்தவுடன் போலீசார் கைது செய்தனர். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) ஒரு நாள் தான் தஞ்சை ராசியா என தெரியவில்லை என்னை கைது செய்யவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நேற்று தான் எனது பிரசார பயணத்தை தொடங்கியது போல் இருந்தது. பிரசாரம் செய்த திருப்தி இருந்தது. வரும் வழியெல்லாம் மக்கள் ஆதரவு அளித்தனர்.

ஆட்சியாளர்கள் சும்மா இருந்திருந்தால் கூட இவ்வளவு எழுச்சியாக பிரசாரம் பயணம் அமைந்து இருக்குமா? என தெரியவில்லை. முதல் நாளில் என்னை கைது செய்து மாலை 6 மணிக்கு விடுவித்தார்கள். தொடர்ந்து பிரசாரம் செய்தேன். 2-வது நாள் கைது செய்து இரவு 8 மணிக்கு விடுவித்தார்கள். தொடர்ந்து பிரசாரம் நடத்தினேன். 3-வது நாள் கைது செய்து இரவு 11.30 மணிக்கு விட்டார்கள். மீண்டும் தொடர்ந்து பிரசாரம் செய்தேன்.

நீங்கள் எத்தனை மணிக்கு விட்டாலும் நான் வீட்டிற்கு செல்லமாட்டேன். பிரசாரம் தான் செய்வேன். போகும் இடமெல்லாம் மக்கள் இருப்பார்கள். இளைஞரணியினர் வரவேற்பார்கள் என போலீசாரிடம் சொல்லி விட்டேன். அதேபோல் போகும் இடம்மெல்லாம் எழுச்சி இருந்தது. நான் கைதாகும்போதெல்லாம் தினமும் ஏராளமான இளைஞரணியினரும் கைதானார்கள்.

உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில், விடியலை நோக்கி பிரசாரத்திற்கு அ.தி.மு.க. தடை போடுகிறது. எந்த தடை போட்டாலும் நிற்கமாட்டோம். தடைகளை தாண்டி பிரசார பயணம் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றிய பிறகு காவல் துறையினர் பயந்து என் பக்கத்தில் வரவில்லை.

எந்த தலைவருக்கும் இவ்வளவு போலீசார் வந்தது இல்லை என இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். காவல் துறைக்கு என்மீது அவ்வளவு பாசம். 3 நாட்களாக என் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருந்தார்கள். எங்கே போனாலும் ஆயுதம் ஏந்திய போலீசார், வஜ்ரா வாகனம் என எதையெல்லாமோ காண்பித்து பயம் காட்டினார்கள். 2 நாட்களில் பயந்து விட்டு போய்விடுவார் என நினைத்தனர். ஆனால் அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்.

தி.மு.க. எமர்ஜென்சி, மிசாவையே பார்த்தது. இவர்களை பார்த்தா பயந்து விடப்போகிறது. பொதுமக்களை சந்திக்கும்போது ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது. கண்டிப்பாக வரும் சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, ஆட்சி பொறுப்பை நமது தலைவர்(மு.க.ஸ்டாலின்) கையில் கண்டிப்பாக ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள்.

‘நிவர்’ புயல் கரையை கடக்கும். 2, 3 நாட்களுக்கு மிகப்பெரிய மழை இருக்கும் என சொல்கிறார்கள். அடுத்த 3 நாட்களுக்கு புயல் காரணமாகவும், மழை காரணமாகவும் நம்முடைய விடியலை நோக்கி பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு மீண்டும் 28-ந் தேதி தொடங்கலாம் என இருக்கிறேன்.

இந்த பயணத்தை எங்கே விட்டேனோ அந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்துதான் தொடங்க போகிறேன். சென்னைக்கு வந்த அமித்ஷாவை வரவேற்க பா.ஜ.க.வினரை விட அ.தி.மு.க.வினர் தான் அதிக அளவு நின்று கொண்டிருந்தனர். நாம் களத்தில் இறங்கி எழுச்சியோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தலைவர்(மு.க.ஸ்டாலின்) பெயரில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்களோ? அதே வெற்றியை சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக கொடுப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து அவர்களது அமோக வரவேற்பையும், எழுச்சியையும் பார்க்கும்போது தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொறுப்பாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.(மத்திய மாவட்டம்), ஏனாதி பாலு(தெற்கு மாவட்டம்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ்.கே.செந்தில் ஆகியோர் பேசினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் நீலமேகம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story