அரியலூர் மாவட்ட பகுதிகளில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


அரியலூர் மாவட்ட பகுதிகளில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Nov 2020 3:15 AM IST (Updated: 25 Nov 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட பகுதிகளில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஜெயங்கொண்டம்,

‘நிவர்’ புயல் காரணமாக அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணி உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக நிலைய அலுவலர் மோகன்ராஜ் தெரிவித்தார். மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு உட்பட்ட திருச்சி ரோடு, அண்ணா சாலை, பஸ் நிலையம் மற்றும் நான்கு ரோடு என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று மக்களுக்கு ‘நிவர்‘ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தீயணைப்பு நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுப்பணித்துறையினர், துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி துறை, வருவாய்துறையினர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் என பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அம்மா உணவகத்தில் சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதை நகராட்சி ஆணையர் சுபாஷினி பார்வையிட்டார்.

இதேபோல் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் ‘நிவர்‘ புயலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய்த்துறை சார்பில் கொள்ளிடம் ஆற்றுப்படுகைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்கி இருக்கும்படி அறிவுறுத்த கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் 500 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் 100 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த ஒன்றிய அலுவலகம் மற்றும் 33 கிராம ஊராட்சிகளில் மரம் அறுக்கும் எந்திரமும் தயார் நிலையில் உள்ளன. குடிநீர் வினியோகம் செய்வதற்கு 27 லாரிகள் தயார் நிலையில் உள்ளன. நீர் தேங்கும் பகுதியில் இருந்து நீரை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு விசை மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு ஏற்பாடுகளும், ஆயிரம் பேருக்கு பாய் மற்றும் போர்வைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அருள்மொழி முகாமில் 47 பேரும், உதயநத்தம் முகாமில் 38 பேரும், வேம்புகுடி முகாமில் 48 பேரும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் ஒன்றியம் முழுவதும் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளார்கள்.

முகாமிற்கான ஏற்பாடுகளை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) பிரபாகரன், (கிராம ஊராட்சி) ஸ்ரீதேவி, தா.பழூர் வருவாய் ஆய்வாளர் பகவதி ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கக்கூடிய பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story