தர்மபுரி மாவட்டத்தில் புயல் - வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்
தர்மபுரி மாவட்டத்தில் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மின் தெரிவித்தார்.
தர்மபுரி,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் இன்று (புதன்கிழமை) தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல், மழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் மழையை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 6 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கு தேவையான அவசரகால உபகரணங்கள், கருவிகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மின் நேற்று தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் மழையை எதிர்கொள்ள தேவையான உபகரணங்கள், கருவிகள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 120 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேர சேவைக்கு தயாராக உள்ளனர். புயல் மழையால் தர்மபுரி மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் மழை பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள், என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ஆனந்த், தர்மபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story