ஓசூரில் இருந்து வங்காளதேசத்துக்கு ரெயிலில் அனுப்பப்பட்ட 100 சரக்கு வேன்கள்


ஓசூரில் இருந்து வங்காளதேசத்துக்கு ரெயிலில் அனுப்பப்பட்ட 100 சரக்கு வேன்கள்
x
தினத்தந்தி 25 Nov 2020 9:30 AM GMT (Updated: 25 Nov 2020 9:30 AM GMT)

ஓசூரில் இருந்து வங்காளதேசத்துக்கு ரெயிலில் 100 சரக்கு வேன்களை பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளர் அசோக்குமார் வர்மா அனுப்பி வைத்தார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசோக் லேலண்டு என்ற கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, “தோஸ்த்“ என்ற பெயரில் மினி சரக்கு வேன் தயாரிக்கப்பட்டது. இந்த சரக்கு வேன்களை முதன்முறையாக ரெயில் மூலம் வங்காள தேசத்திற்கு அனுப்ப, தென்மேற்கு ரெயில்வே நிர்வாகத்துடன், அசோக் லேலண்டு நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மண்டலத்திற்குட்பட்ட ஓசூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சரக்கு வேன்களை வங்காளதேசத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு மண்டல மேலாளர் அசோக்குமார் வர்மா கலந்து கொண்டு கொடியசைத்து, வங்காளதேசத்திற்கு செல்லும் ரெயிலை வழியனுப்பி வைத்தார். இதில், பெங்களூரு ரெயில்வே டிவிசன் முதுநிலை வர்த்தக பிரிவு மேலாளர் கிருஷ்ணா ரெட்டி, ஆபரேசனல் மேலாளர் அகில் சாஸ்திரி மற்றும் ரெயில்வே அதிகாரிகள், அசோக் லேலண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராகேஷ் மிட்டல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மண்டல மேலாளர் கூறியதாவது:-

மின்சார ரெயில்

தென்மேற்கு ரெயில்வே நிர்வாகத்துடன், ஓசூர் அசோக் லேலண்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டு, முதன்முறையாக ரெயில் மூலம் நேரிடையாக வங்காளதேசத்திற்கு ரூ.5 கோடி மதிப்பிலான 100 மினி சரக்குவேன்கள் அனுப்பப்படுகிறது. இதற்காக, ரெயிலில் 25 வேகன்கள் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வேகனிலும் 4 வேன்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த ரெயில், பெங்களூரு, சென்னை, விஜயவாடா, ஒடிசா ஆகிய பகுதிகளை கடந்து வங்காளதேசத்தை சேர்ந்த பெனபோல் என்ற இடத்திற்கு 2 அல்லது 3 நாட்களில் சென்றடையும்.

ஓசூர்-பெங்களூரு இடையே மின்சார ரெயில் இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்தவுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஓசூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story