கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை
கட்டிட தொழிலாளி மர்மசாவு வழக்கில் துப்பு துலங்கியது. அதாவது கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்தும் சக்கராயப்பட்டணா போலீசார் விரைந்து வந்து, கொலையான பிரதீப்பின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதுபற்றி அவரது மனைவி ரோகிணியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் பிரதீப்பின் வாயில் இருந்து ரத்தம் வந்திருந்தது. மேலும் உடலில் ரத்த காயங்களும் இருந்தன. இதனால் சந்தேகத்தின் பேரில் ரோகிணியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த மர்மசாவு வழக்கில் துப்பு துலங்கியது. அதாவது, பிரதீப்புக்கும், ரோகிணிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையே குடிபோதைக்கு அடிமையான பிரதீப் அடிக்கடி மது போதையில் வந்து ரோகிணியுடன் தகராறு செய்து வந்துள்ளார். பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் ஆவார். இவர் பிரதீப்பின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் ரோகிணிக்கும், சீனிவாசனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மலர்ந்தது. இதனால் கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதை அறிந்த பிரதீப் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் பிரதீப்பை உயிருடன் விட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என ரோகிணியும், சீனிவாசனும் கருதினர். இதனால் பிரதீப்பை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி 23-ந்தேதி இரவு குடிபோதையில் பிரதீப் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சீனிவாசனும் வந்துள்ளார். இதையடுத்து ரோகிணி தனது பிள்ளைகளை பக்கத்தில் வீட்டில் டி.வி. பார்க்க அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சீனிவாசன், உனது மனைவிக்கு உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை. எனவே அவருக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று பிரதீப்பிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சீனிவாசனுக்கும், பிரதீப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசனும், ரோகிணியும் சேர்ந்து பிரதீப்பை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஒரு துண்டால் பிரதீப்பின் வாயில் துணி திணித்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் பிரதீப்பை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை படுக்கை அறையில் போட்டு தூங்குவது போல் போர்வையால் மூடி போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் பக்கத்துவீட்டில் இருந்து குழந்தைகள் வந்துள்ளன. அந்த குழந்தைகள், அப்பா எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரோகிணி அப்பா தூங்குவதாக குழந்தைகளிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சீனிவாசனும், ரோகிணியும் ஒரே படுக்கையில் தூங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை சீனிவாசன் அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் தனது கணவர் குடிபோதையில் இறந்துவிட்டதாக கூறி ரோகிணி நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரோகிணியே பிரதீப்பை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கைதான 2 பேரிடமும் சக்கராயப்பட்டணா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story