105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் பா.ஜனதா - துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கு
105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் சிவசேனா கூட்டணி அரசு கவிழும் என பா.ஜனதாவினர் கூறுவதாக அஜித்பவார் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மராட்டியத்தின் முதலாவது முதல்-மந்திரி யஷ்வந்த்ராவ் சவானின் நினைவு நாள் நிகழ்ச்சி சத்தாரா மாவட்டம் காரட்டில் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
மராட்டியம் சில மாதங்களுக்கு முன் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இதுகுறித்து முதல்- மந்திரி, மறுவாழ்வு துறை மந்திரி, தலைமை செயலாளர் ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் இன்று வரை மத்திய குழு எதுவும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரவில்லை.
மன்மோகன் சிங் ஆட்சியின் போது ஏதாவது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மத்திய குழுவினர் ஆய்வு செய்வார்கள். உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்படும்.
எல்லா மாநிலங்களும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பாக உதவ வேண்டும். இயற்கை சீற்றங்களின் போது, மத்திய அரசு கட்சி, கொள்கைகள் பாகுபாடு எல்லாம் காட்டக்கூடாது. ஆனால் அது நடப்பது இல்லை.
மகாவிகாஸ் கூட்டணி சரத்பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி ஆகியோரால் அமைக்கப்பட்டது. அவர்கள் உறுதியாக இருக்கும் வரை இந்த கூட்டணிக்கு எதுவும் ஆகாது. 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் அவர்கள் மகாவிகாஸ் கூட்டணி விரைவில் கவிழ்ந்துவிடும் என கூறி வருகின்றனர். இவ்வாறு அவா் பேசினார்.
Related Tags :
Next Story