நிவர் புயலால் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை காரணமாக நகரத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.
சென்னை,
வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழையை கொடுத்தது. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பரவலாக மழை வெளுத்து வாங்க தொடங்கியது.
இந்த நிலையில் நேற்றும் மழையின் தீவிரம் ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. அவ்வப்போது சில நிமிடங்கள் ஓய்வு கொடுத்துவிட்டு, பின்னர் அடாவடியாக மழை பெய்தது. வழக்கத்தை காட்டிலும் காற்றின் வேகம் தீவிரமாகவே இருந்தது. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரமும், காற்றின் வேகமும் அதிகரித்தது. சாலையோர மரங்கள் காற்றின் வேகத்தில் தலைவிரித்து ஆடுவது, நிவர் புயலின் பீதியை வெகுவாக உணர செய்வதாக அமைந்தது.
குறிப்பாக நேற்று காலை 11.50 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரை நகரின் பல இடங்களில் இடைவிடாது மழை பெய்தது. அவ்வப்போது சில சமயம் லேசான இடி சத்தத்தையும் கேட்க முடிந்தது. பின்னர் பிற்பகல் 2.40 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மழை தொடர்ச்சியாக பெய்தது. மழை நின்றாலும் தூரல் நின்றபாடில்லை. இதனால் இடைவிடாது மழை என்ற வகையிலேயே சென்னை நகரமே தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தது. பின்னர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
திரும்பிய திசையெங்கும் மழைநீர் என சென்னை நகரமே வெள்ளக்காடானது. வெள்ளத்தில் நகரமே மிதக்கிறது என்றாலும் அது மிகையாகாது. அந்தளவு மழைநீர் சூழ்ந்து தீவு போலவே சென்னை காட்சியளித்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
Related Tags :
Next Story