விழுப்புரம் அருகே பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்


விழுப்புரம் அருகே பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்
x
தினத்தந்தி 26 Nov 2020 3:19 PM IST (Updated: 26 Nov 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பாசன வாய்க்காலை பொதுமக்கள், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிற நிலையில் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச்செல்லும் வரத்து வாய்க்கால்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பிலும், தூர்ந்துபோயும் உள்ளன. அவ்வாறு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பல இடங்களில் கிராம மக்களும், விவசாயிகளும் தாங்களே முன்வந்து வாய்க்கால்களை தூர்வாரி, மழைநீரை கொண்டு செல்லும் நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.

தூர்ந்துபோன வாய்க்கால்

அந்த வகையில் விழுப்புரம் தென்பெண்ணைஆற்றின் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து பல்வேறு கிளை வாய்க்கால்கள் பிரிந்து ஏரிகளை நிரப்புகிறது. அதில் ஆழாங்கால் வாய்க்கால் மூலம் 15 கிளை வாய்க்கால்கள் பிரிந்து விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்புகின்றன.

இதில் ஆனாங்கூர், சாமிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த வாய்க்காலின் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளித்தது. அந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென பலமுறை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் கேட்டால், தற்போது வாய்க்காலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் படவில்லை என்று பொதுப்பணித்துறையினர் கூறினர்.

சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

இதனால் அதிகாரிகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை கருதி தாங்களே சொந்தமாக செலவு செய்து ஏரி நீர்வரத்து வாய்க் காலை தூர்வார முடிவு செய்தனர். இதற்காக பொதுமக்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து ஆழாங் கால் வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story