சங்கராபுரம் அருகே மணி நதியை கடந்து வர கிராமமக்களுக்கு தடை
சங்கராபுரம் அருகே மணி நதியை கடந்து வர கிராமமக்களுக்கு தடை கலால் உதவி ஆணையர் ஆய்வு.
சங்கராபுரம்,
சங்கராபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட கிராமம் கூடலூர் ஆகும். இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து மணிநதியை கடந்துதான் அருகில் உள்ள மோட்டாம்பட்டி உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு சென்று வர வேண்டும். ஆனால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் நதியில் இறங்கிதான் மறுபக்கம் வந்து செல்கிறார்கள். தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் மழையால் மணி நதியில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. எனவே கூடலூர் கிராமமக்கள் 2 நாட்கள் மணிநதியை கடந்து செல்ல வேண்டாம் எனவும், ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளும் படி தண்டோரா மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சரவணன் நேற்று மணி நதியை பார்வையிட்டார். அப்போது கூடலூர் கிராமமக்கள் யாரேனும் நதியை கடந்து வருகிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் கீதா உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் சரவணன் பல்வேறு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பெரிய பதாகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து அந்த விளம்பர பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story