கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் பரவலாக மழை ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து காணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் மழை பெய்தது. தற்போது சம்பா சாகுபடி நடைபெற்று வருவதால் பருவமழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் வங்கக்கடலில் கடந்த 21-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது பின்னர் வலுவடைந்து புயலாக மாறியது. நிவர் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் புதுச்சேரி அருகே இரவு கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
குளம்போல் தேங்கிய தண்ணீர்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நேற்று காலை 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது. மழையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் புயல் எச்சரிக்கையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஜவுளி உள்ளிட்ட கடைகளும், மீன் அங்காடியும் வழக்கம்போல திறந்து இருந்தன. கொட்டும் மழையில் பொதுமக்கள் குடை பிடித்துக்கொண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. மழையால் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
2-வது நாள் விடுமுறை
அதேபோல் திருக்கோவி லூர், சின்னசேலம், கல்வராயன்மலை, கச்சிராயபாளையம், சங்கராபுரம், தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து காணப்படுவதால் அதன் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
புயலின் அச்சுறுத்தல் காரணமாக நேற்று அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. இதனால் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. என்றாலும் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மழை நிலவரங்களை அந்தந்த பகுதி ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
‘நிவர்’ புயல் காரணமாக நேற்று முன்தினத்தில் இருந்து கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இரவிலும் விட்டுவிட்டு மழை தூறியது. தொடர்ந்து, நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான காணை, பெரும்பாக்கம், நன்னாடு, கோலியனூர், சாலைஅகரம், வளவனூர், பிடாகம், கண்டமானடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து, பெய்த இந்த மழையின் காரணமாக விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
கடலோர பகுதிகளில்...
மேலும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், மயிலம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளில் காலையில் இருந்து மாலை 6 மணி வரை மிதமான மழை பெய்த நிலையில் மரக்காணம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம், நடுக்குப்பம், கூனிமேடு, பொம்மையார்பாளையம், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழையாகவும் கொட்டி தீர்த்தது. மரக்காணம் அருகே பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தால் கரையோரம் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.
Related Tags :
Next Story