புயல் எச்சரிக்கை: குளம் போல் அலையின்றி காணப்பட்ட குளச்சல் கடல்
புயல் எச்சரிக்கைக்கு மாறாக நேற்று குளம் போல் அலையின்றி குளச்சல் கடல் காணப்பட்டது.
குளச்சல்,
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய் மற்றும் செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வந்த நிலையில் வங்க கடலில் உருவான ‘நிவர்‘ புயல் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். புயல் எச்சரிக்கை குறித்து குளச்சல் துறைமுகத்தில் துண்டு பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் அவசர, அவசரமாக கரை திரும்பின.
அலையின்றி காணப்பட்ட கடல்
ஆனால் இந்த படகுகள் மீன்களை இறக்கி விட்டு மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ‘நிவர்‘ புயல் எச்சரிக்கை இன்று (வியாழக்கிழமை) இருப்பதால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வந்த பிறகு தான் படகுகளில் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக கரை திரும்பிய விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், துறைமுகத்தில் போதிய இடவசதியின்றி விசைப்படகினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விசைப்படகுகளை பாதுகாக்க குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். புயல் எச்சரிக்கையையொட்டி வட மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில், குளச்சல் கடலில் அலை சீற்றமாக இல்லாமல், அலையின்றி காணப்பட்டது. குளச்சல் கடல் குளம் போல் சாந்தமாக மாறியதால் அந்த பகுதியில் பரபரப்புடன் காட்சி அளித்தது.
Related Tags :
Next Story