8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது


8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 26 Nov 2020 7:05 PM IST (Updated: 26 Nov 2020 7:05 PM IST)
t-max-icont-min-icon

8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் அனுமதி

இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா பரவல் குறைந்ததால், கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல இயக்கங்களும் கோரிக்கை விடுத்தது. இதுபற்றி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

கடந்த 10-ந் தேதி நாகர்கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு உடனடியாக படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.

8 மாதங்களுக்கு பிறகு இயக்கம்

அதே சமயத்தில் படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த அடிப்படையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்தில் அமைந்துள்ள கியூ செட்டில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்வதற்கு வசதியாக வெள்ளை நிற வட்டம் போடும் பணி நடந்தது. மேலும் கடலில் சுற்றுலா பயணிகளுடன் படகு வெள்ளோட்டமும் விடப்பட்டது.

இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து நேற்று காலை தொடங்கியது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடியசைத்து படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அதே படகில் கடலில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை வரை பயணம் செய்தார். நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணைச் செயலாளர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய அவை தலைவர் தம்பி தங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவபாலன், லீபுரம் ஊராட்சி செயலாளர் லீன், வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, உதவி மேலாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பாளர் ராஜேந்திரன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பணியாளர் நியமன ஒப்பந்தகாரர் தமிழ் வெற்றி சுடர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தளவாய்சுந்தரத்துக்கு நன்றி

அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளும், விவேகானந்தர் மண்டபத்திற்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி படகில் பயணம் செய்து பார்வையிட்டனர். படகு போக்குவரத்து தொடக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் லட்டு வழங்கப்பட்டது. மேலும் படகு போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ் கோமஸ், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் அல்போன்ஸ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதேபோல கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சகாய சேவியர், பொருளாளர் பாலன், துணை செயலாளர் பீர் முகமது சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.7 கோடியே 85 லட்சம் செலவில் புதிதாக வாங்கியுள்ள குளிர்சாதன வசதி கொண்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய பெயர்கள் உடைய 2 அதிநவீன சொகுசு படகுகளும், ஏற்கனவே உள்ள பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய படகுகளும் நேற்று விவேகானந்தர் மண்டபத்திற்கு விடப்பட்டன. படகு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story