பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2020 9:16 AM GMT (Updated: 27 Nov 2020 9:16 AM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர், 

மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நவம்பர் 26-ந் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ‘நிவர்‘ புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று சி.ஐ.டி.யு., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (எல்.பி.எப்.), ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

வேலை நாட்களை உயர்த்தி...

அப்போது வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 மத்திய அரசு வழங்கிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முற்றிலும் நீக்குவது, 4 தொகுப்புகளாக சுருக்குவது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, கூலியை உயர்த்தி கொடுப்பதோடு நகர்புறங்களுக்கு விரிவுபடுத்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.

ஆட்டோக்கள் ஓடவில்லை

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மல்லிஸ்குமார், சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், திராவிட கழக மாவட்ட தலைவர் தங்கராசு, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளர்கள் தங்களது கடைகளை அடைத்திருந்தனர். ஆனால் மற்ற கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள் வழக்கம் போல் ஓடியது. நிவர் புயல் காரணமாக நேற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொது விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்களும், வங்கிகளும் இயங்கவில்லை. தபால் நிலையங்களில் 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

Next Story